<
>

ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும்.. சிஎஸ்கே மற்றும் தோனி குறித்துப் பேசிய தீபக் சஹார்!

Deepak Chahar celebrates the wicket of Shubman Gill with MS Dhoni BCCI

சென்னையின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் சிஎஸ்கே அணி மற்றும் தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் தீபக் சஹார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சஹார் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர்பிளேயில் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளரான சஹார் பல ஆட்டங்களில் சென்னைக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கவுரவ் கபூரின் பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சஹார். அப்போது சிஎஸ்கே அணியின் சூழல் மற்றும் தோனி குறித்து அவர் பேசுகையில், "சென்னை அணியின் சூழல் மிகவும் வித்தியாசமானது. எல்லாம் உங்களுடைய விருப்பமே. நீ பயிற்சிக்குப் போ, நீ ஜிம்முக்குப் போ என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுக்கலாம். நீங்கள் விரும்பினால் பயிற்சி செய்யலாம். அல்லது நாளை செய்யலாம். ஒருவேளை நீங்கள் விரும்பவில்லை என்றால் பரவாயில்லை. நீங்கள் ஓய்வெடுக்க விரும்புகிறீர்கள் என்றாலும் சரிதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் மைதானத்தில் நன்றாக விளையாட வேண்டும்.

நாங்கள் ஆட்டத்தில் தோற்றாலும் அணி நிர்வாகமோ, மஹி பாயோ (தோனி) யாரும் எதுவும் சொல்லமாட்டர்கள். நாங்கள் ஒரு பருவத்தில் சரியாக விளையாடவில்லை. ஆனாலும் அணியின் சூழல் நன்றாகவே இருந்தது. யாருக்கும் எந்த அழுத்தமும் இல்லை. அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் மஹி பாய். நான் முதன்முதலில் சிஎஸ்கேவுக்கு வந்தபோது, இரவு உணவு சமயத்தில் அவர் எப்போதும் இளம் வீரர்களுடன் உட்கார்ந்திருப்பதை கவனித்தேன். ஏதாவது ஒன்றை சரி என அவர் உணர்ந்தால், அதனைவிட்டு விலகமாட்டார்" என்றார்.